Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

இறைவன் நரக நெருப்பால் ஏன் தண்டிக்க வேண்டும்?

உதாரணத்திற்கு யாராவது ஒருவர் தங்கள் பெற்றோரை புறக்கணித்து, அவமானப்படுத்தி, வீட்டை விட்டு வெளியேற்றி, அவர்களை பாதையில் விட்டுவிட்டால் அந்த நபர் குறித்து எப்படி நினைப்போம்?

ஒரு நபர் இந்த நிகழ்வைத் தொடர்ந்து தான் அந்த நபரின் வீட்டிற்கு சென்று, அவனை கௌரவித்து, உணவு வழங்கி, அவரின் செயலுக்கு நன்றி பாராட்டுவதாக யாராவது கூறினால், மக்கள் அந்த நபரின் செயலை பாராட்டி அதனை ஏற்றுக்கொள்வார்களா?! அல்லாஹ்வுக்கே இதில் உயர் முன்மாதிரி உண்டு. படைப்பாளனை நிராகரித்து, அவனை நம்பாத ஒருவரின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்? நரக நெருப்பால் தண்டிக்கப்படுவோர் அவர்களுக்கே உரிய சரியான தண்டனையையே பெறுகிறார்கள். காரணம் குறித்த அந்நபர் பூமியில் அமைதியும், நன்மையும் விளைய வேண்டும் என்பதை விரும்பாது அதனை அற்பமாகக் கருதினார். ஆகவே பரலோகத்து சுவர்க்க இன்பத்தை பெறுவதற்கு தகுதியற்றவராக மாறி விடுகிறார்.

உதாரணமாக, இரசாயன ஆயுதங்களால் குழந்தைகளை சித்திரவதை செய்யும் ஒருவர் எவ்வித விசாரணையுமின்றி சுவர்க்கம் நுழைய வேண்டும் என நாம் எதிர்பார்ப்போமா?

அவர்களின் குற்றம் ஒரு குறிப்பிட்ட காலத்துடன் மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல. மாறாக அது ஒரு நிலையான பண்பாகும்.

அல்லாஹ் கூறுகிறான் :

''(ஒரு வேளை) அவர்கள் திரும்பவும் அனுப்பப்பட்டாலும், அவர்கள் எதைவிட்டு தடுக்கப்பட்டிருந்தார்களோ, அதற்கே அவர்கள் மீண்டு விடுவார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே". (அல்அன்ஆம்: 28). تقدم

இவ்வாறானோர் மறுமைநாளில் கூட இறைவனுக்கு முன் பொய் சத்தியம் செய்வதன் மூலமே அல்லாஹ்வை எதிர்கொள்வார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் :

''அவர்களை அல்லாஹ் ஒன்றாக எழுப்பும் நாளில், உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வது போன்று அவனிடமும் சத்தியம் செய்வார்கள். அவர்கள் (தமக்குப் பயனளிக்கும்) ஏதோ ஒன்றின் மீது தாம் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள்தாம் பொய்யர்கள்''. (அல் முஜாதலா :18). تقدم

உள்ளத்தில் பொறாமையும் ரோசமும் கொண்ட சில மனிதர்களிடமிருந்து தீமை வரமுடியும். இவ்வாறானோர் மனிதர்களுக்கு மத்தியில் பிரச்சினைகளையும் மோதல்களையும் ஏற்படுத்த காரணமாயிருப்பர். ஆகையால் அவர்களுக்குரிய வெகுமதியாக நரக நெருப்பு இருப்பது நியாயமாகும். இதுவே அவர்களின் இயல்பிற்கு பொருந்துவதாக உள்ளது.

அல்லாஹ் கூறுகிறான் :

''எவர்கள் நமது வசனங்களைப் பொய்ப்பித்து அவற்றை விட்டும் பெருமையடிக்கிறார்களோ, அவர்கள் நரகவாசிகள் அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்''. (அல் அஃராப் : 36). تقدم

நீதியாளன் என்ற அல்லாஹ்வின் பண்பைப் பொறுத்தவரை அவனின் அருள் மற்றும் கருணையுடன் சேர்த்து அவன் தண்டிப்பவனாகவும் உள்ளான் என்பதை காட்டுகிறது. கிறிஸ்துவத்தில் அல்லாஹ்வை அன்பிற்கும், யூதமதத்தில் அல்லாஹ்வை கோபம் என்ற பண்புகளுக்குரியவனாகவே சித்தரிக்கின்றனர். இஸ்லாத்தில் அல்லாஹ் என்பவன் நீதியும் கருணையும் நிறைந்த இறைவன், அவனுக்கு உயரிய திருநாமங்கள் அனைத்தும் உண்டு. அவை அழகு மற்றும் மகத்துவம் போன்ற பண்புகளை உள்ளடக்கியுள்ளது.

அத்துடன்; நாம் எமது நடைமுறை வாழ்க்கையில், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற தூய்மையான பொருட்களில் உள்ள அசுத்தங்களை வேறுபடுத்த நெருப்பைப் பயன்படுத்துகிறோம். எனவே சர்வ வல்லமைமிக்க அல்லாஹ் - இதில் உயர் முன்மாதிரி அவனுக்குரியது- மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் தனது அடியார்களை பாவங்கள் மற்றும் தவறான செயல்களிலிருந்து தூய்மைப்படுத்த நரக நெருப்பைப் பயன் படுத்துகிறான். இறுதியில் யாருடைய உள்ளத்தில்; அணுவளவு இறைவிசுவாசம் இருக்கிறதோ அவர் நரக நெருப்பிலிருந்து அவனின் கருணையினால் வெளியேற்றிவிடுவான்.

அல்லாஹ் இரக்கமுள்ளவன் எல்லா நன்மைகளுக்கும் அடிப்படைக்காரணமாக இருப்பவன். ஆகவே அவன் எம்மனைவரையும் எவ்வித விசாரணையுமின்றி சுவர்க்கத்தில் நுழைவிக்காதது ஏன்?

உண்மையில், அல்லாஹ் தனது அடியார்கள் அவனைவரும் தன்னை விசுவாசிக்க வேண்டும் என விரும்புகிறான்.

அல்லாஹ் கூறுகிறான் :

"எனினும், தன் அடியார்கள் (தன்னை) நிராகரிப்பதை அவன் விரும்புவதே இல்லை. நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாயின், அதனால் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான். ஒருவனின் (பாவச்) சுமையை மற்றொருவன் சுமப்பதில்லை. இனி நீங்கள் செல்ல வேண்டியது உங்கள் இறைவனிடம்தான். அச்சமயம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிகிறான்". (அஸ்ஸுமர்:7) تقدم

இருப்பினும், அல்லாஹ் எவ்வித விசாரணையுமின்றி அனைவரையும் சொர்க்கத்திற்கு அனுப்பினால், நீதி வெளிப்படையாக மீறப்படும். அத்துடன் அல்லாஹ் தனது தீர்க்கதரிசி மூஸா (மோசஸ்) மற்றும் கொடுங்கோலன் பிர்அவனுக்கும் இதே வழிமுறையை பின்பற்ற நேரிடும். அது மாத்திரமின்றி ஒவ்வொரு அடக்குமுறையாளனும் -அநியாயக்காரனும்- அவனால் பாதிக்கப்பட்டோரும் எதுவும் செய்யாதது போல் சொர்க்கத்தில் நுழைவர். ஆகவே சொர்க்கத்தில் நுழைபவர்கள் தகுதியின் அடிப்படையில் நுழைவதை உறுதி செய்வதற்கான ஒரு பொறிமுறையின் தேவை உள்ளது.

இஸ்லாமிய போதனைகளின் அழகு என்னவென்றால், அல்லாஹ் நம்மை விட நம்மை பற்றி நன்கு அறிந்துள்ளான். எனவே அவனுடைய திருப்தியை பெற்று சுவர்க்கம் நுழைவதற்கு தேவையான உலகில் அவசியம் பின்பற்றி ஒழுக வேண்டிய விடயங்களை எமக்கு அறிவித்துத் தந்துள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான் :

"எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப் படுத்தமாட்டான்". (அல் பகரா : 286). تقدم

இறைவன் தனது அடியார்களை அவர்களது குறுகிய கால வாழ்க்கையில் செய்த ஒரு சில பாவங்களுக்காக முடிவில்லாது தண்டிப்பது ஏன்?

பல குற்றங்கள் சில போது ஆயுள் தண்டனைக்கு வழிவகுக்கும். குற்றவாளி தன் குற்றத்தைச் சில நிமிடங்களில் செய்ததால், ஆயுள் தண்டனை நியாயமற்றது என்று யாராவது கூறுவார்களா? குற்றவாளி ஒரு வருடம் மாத்திரமே பணத்தை கொள்ளை அடித்தான் என்பதற்காக பத்து வருட சிறைத்தண்டனை நியாயமற்ற தீர்ப்பு எனக் கூற முடியுமா? குற்றங்களுக்கான தண்டனைகள் காலத்துடன் தொடர்புடையவை அல்ல, மாறாக அக்குற்றங்களின் அளவு மற்றும் அவற்றின் கொடிய தன்மையைப் பொறுத்ததாகும்.