Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கமா?

உண்மையில் தீவிரவாதம், கடும்போக்கு, பிடிவாதம் போன்ற பண்புகளை அடிப்படையில் சத்திய மார்க்கமான இஸ்லாம் தடை செய்துள்ளது. அல்குர்ஆனின் அதிகமான வசனங்கள் பிறருடன் உறவாடும் போது மென்மை மற்றும் கருணையை கடைப்பிடிக்குமாறும், மன்னிப்பு, சகிப்புத் தன்மை போன்ற பண்புகளை அணிகலனாகக் கொள்ளுமாறும் தூண்டுகிறது.

அல்லாஹ் கூறுகிறான் :

"(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீர் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! மேலும், (யுத்தம், சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வருவீராக! (ஒரு விஷயத்தை செய்ய) நீர் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைப்பீராக. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கிறான்". (ஆல இம்ரான் : 159). تقدم

"(நபியே! மனிதர்களை) மதிநுட்பத்தைக் (விவேகத்தை) கொண்டும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உமது இறைவனுடைய வழியின் பக்கம் அழைப்பீராக! மேலும், அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்வீராக. உமது இறைவனுடைய வழியிலிருந்து வழி தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான்". (அந்நஹ்ல் :125). تقدم

அல்குர்ஆனில் தெளிவாக ஹராம் என குறிப்பிடப்பட்ட சில விடயங்களைத் தவிர மார்க்கத்தில் அனைத்தும் அனுமதிக்கப் பட்டது என்பதே அடிப்படையாகும. இதில் எவரும் மாற்றுக்கருத்து கொள்ள மாட்டார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் :

"ஆதமுடைய மக்களே! தொழும்போதெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள்; பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், வீண் செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. அல்லாஹ் தனது அடியார்களுக்கு வெளிப்படுத்திய அவனது அலங்காரத்தையும் உணவில் பரிசுத்தமானவற்றையும் தடை செய்பவன் யார்? என்று நபியே நீர் கேட்பீராக. இவை நம்பிக்கை கொண்டோருக்கு இவ்வுலக வாழ்வில் மற்றோருடன் அனுமதிக்கப்பட்டதாகும். மறுமையில் அவர்களுக்கு மட்டுமே உரியதுமாகும் என்று நீர் கூறுவீராக. அறிந்து கொள்ளும் கூட்டத்திற்கு வசனங்களை இவ்வாறே நாம் தெளிவு படுத்துகிறோம். (நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக என் இறைவன் (ஹராம் என்று) தடை செய்திருப்பதெல்லாம்: பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ செய்யப்படும் மானக்கேடான காரியங்களையும், மற்ற பாவங்களையும், நியாயமின்றி ஒருவர் மீது (ஒருவர்) கொடுமை செய்வதையும், அல்லாஹ் எதற்கு ஆதாரம் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாக்குவதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுவதையும்தான் (அல்லாஹ் தடுத்திருக்கிறான்)". (அல் அஃராப் : 31-33). تقدم

தீவிரவாதம், கடுமை போக்கு அல்லது மார்க்க ஆதாரமேதுமின்றி அனுமதிக்கப்பட்டவற்றை தடைசெய்வது போன்றவற்றின் பால் அழைக்கும் அனைத்து செயற்களையும் ஷைதானிய செயற்பாடுகளாகவே மார்க்கம் கருதுகிறது. உண்மையில் புனிதமான இம்மார்க்கம் அவற்றை விட்டும் தூய்மையானது என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் :

"மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் (புசிக்க உங்களுக்கு) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே புசியுங்கள். (இதற்கு மாறு செய்யும்படி உங்களைத் தூண்டும்) ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். தீமைகள் மற்றும் மானக்கேடானவற்றை நீங்கள் செய்வதற்கும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாக) கூறுவதற்கும் ஷைத்தான் உங்களைத் தூண்டுகிறான்". (அல் பகரா:168-169). (அல் பகரா:168-169)

"அன்றி ‘‘நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன். அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை உண்டு பண்ணி (பிசாசுகளுக்காக பிரார்த்தனை செய்துவிடப்பட்ட) ஆடு, மாடுகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். அல்லாஹ்வின் படைப்பினங்(களின் கோலங்)களை மாற்றும் படியாகவும் நிச்சயமாக நான் அவர்களை ஏவுவேன்'' (என்று கூறினான்.) ஆகவே, எவன் அல்லாஹ்வையன்றி ஷைத்தானை (தனக்கு) பாதுகாவலனாக எடுத்துக் கொள்கிறானோ அவன் நிச்சயமாக பகிரங்கமான நஷ்டத்தையே அடைந்துவிடுவான்". (அந்நிஸா: 119). تقدم